அரசாங்கம் அதன் மோசடியான அரசியலமைப்பு வேலைத்திட்டத்தில் இருந்து பின்வாங்கி இருந்தாலும், பொதுமக்கள் பங்களிப்பு அரசியலமைப்பு உருவாக்கமொன்றை வென்றெடுப்பதற்காக நாம் எழுப்பும் குரலை நாங்கள் கைவிடக் கூடாது. சிலி நாட்டில் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள முடிந்ததும், எங்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடியதுமான விடயமொன்று தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்நாட்டிலும் எங்களுடையதைப் போல 1980ம் ஆண்டு சர்வாதிகாரி பினோசே காலத்தில் உருவாக்கப்பட்டு 15 தடவைகளுக்கும் மேல் திருத்தப்பட்ட அவலட்சணமான அரசியல் யாப்பு ஒன்றே காணப்படுகின்றது.
2019 ஒக்டோபர் 25ம் திகதி பொதுமக்கள் பங்களிப்புடனான புதியதொரு அரசியலமைப்புக்காக முன்னிற்கும் அமைப்புகளின் அழைப்பின் பேரில் பொதுமக்கள் வீதியில் இறங்கி பொதுமக்கள் பங்களிப்புடனான அரசியலமைப்பு உருவாக்கத்தைக் கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அன்றைய தினம் சந்தியாகோ நகரில் 12லட்சம் அளவிலான மக்கள் குழுமியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்று தொடக்கம் அது வீதியில் நடைபெறும் ஆர்ப்பாட்ட நிகழ்வாக மாறிப்போனது. பிரச்சினை தீவிரமடைவதைத் தடுத்துக் கொள்வதற்காக அரசாங்கம் கடைசியில் அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு இணக்கம் தெரிவித்தது. அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகள் இரண்டினைத் தீர்த்துக் கொள்வதற்காக பொதுமக்கள் கருத்துக் கணிப்பொன்றை நடத்துமாறு அதன்போது பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் அச்செயற்பாடு நாடாளுமன்ற உறுப்பினர்களை முதன்மைப்படுத்திய அரசியலமைப்பு நிர்ணய சபையொன்றின் மூலமாக அரசியல் யாப்பொன்றை உருவாக்கிக் கொள்ளல் தொடர்பில் அரசாங்கத்திற்கு விருப்பு இருந்தது.
ஆனால் 2020 ஒக்டோபர் அளவில் அது தொடர்பாக நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக் கணிப்பில் 78வீதமானவர்கள் புதியதொரு அரசியலமைப்பு விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அதே நேரம் இன்னொரு புறத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றல் இன்றி பொதுமக்கள் பிரதிநிதிகளை மட்டுமே கொண்ட அரசியலமைப்பு நிர்ணய சபையொன்றினால் அது நடைபெற வேண்டும் என்று கருத்துக் கணிப்பில் விருப்பம் வாக்களித்திருந்தார்கள்.
அதன் காரணமாக அரசியலமைப்பு நிர்ணய சபைக்காக பொதுமக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு ஒன்று 2021 மே மாதம் 15, 16 திகதிகளில் நடைபெற்றது. அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நபர்களில் 62 வீதமானவர்கள் சுயாதீன நபர்களாகும். தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளில் 49.50 வீதம் பெண்களாகும். அரசியலமைப்பு உருவாக்கமொன்றில் 50வீதம் பெண்கள் பங்கு கொள்ளும் ஒரே அரசியல் யாப்பு அதுவாகத் தான் இருக்கும். இலங்கையும் அதே வழியைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா..?

Lanka Newsweek © 2026